
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் கொட்டித் தீர்க்கும் சாரல் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 122 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிச்சியில் நனைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கியது.
ஆனால், நேற்று காலையில் இருந்து மதியம் வரை நாகர்கோவில் நகரில் வெயில் கொளுத்தியது. மதிய நேரத்தில் மீண்டும் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையாக சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 122 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 65 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பெருஞ்சாணி அணைக்கு 96 கன அடியும், சிற்றாறு – 1 அணைக்கு 6 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 3 கன அடியும் தண்ணீர் வருகிறது.
சிற்றாறு – 2 அணைக்கு 17 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் விவசாயிகளும், குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த மக்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம்:
பேச்சிப்பாறை – 31 மி.மீ, பெருஞ்சாணி – 25 மி.மீ, சிற்றாறு – 36.2 மி.மீ, மாம்பழத்துறையாறு – 3 மி.மீ, பாலமோர் – 8.4 மி.மீ, ஆணைக்கிடங்கு – 4 மி.மீ, கோழிப்போர்விளை – 6.4 மி.மீ, முள்ளங்கினாவிளை – 6 மி.மீ, புத்தன் அணை – 24.8 மி.மீ, திற்பரப்பு – 2.2 மி.மீ