நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

By Manikanda Prabu  |  First Published Dec 21, 2023, 6:26 PM IST

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி  மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. மழை சற்று ஓய்ந்த நிலையில், மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நேரில் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டுநிலை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Latest Videos

undefined

அதன் தொடர்ச்சியாக, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும், மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. நிதியும் ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டிய முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர், ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மிக்ஜாம் புயலின் போது தமிழக அரசு வழங்கிய நிவாரண நிதியை மத்திய பாஜக அரசு வழங்கியதாக அக்கட்சியினர் கூறிவரும் நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய தவணையைத்தான் மத்திய அரசு வழங்கியுள்ளதே தவிர, கூடுதல் நிதி அல்ல என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை உடனே இழந்த பொன்முடி: யார் இந்த லில்லி தாமஸ்?

தொடர்ந்து பேசிய அவர், “17, 18ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17ஆம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்திருக்கிறது. இது வரலாற்றில் இதுவரை இல்லாதது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை மக்கள் அறிவார்கள். காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழை பெய்து அந்த பகுதியே வெள்ளக் காடாக மாறியது. ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளன. 150 ஆண்டுகள் இல்லாத மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை மக்களை போன்றே தென் மாவட்ட மக்களையும் அரசு காக்கும் என உறுதி அளிக்கிறேன்.” என தெரிவித்தார்.

பிரதமரை மோடியை சந்தித்து அடுத்தடுத்து 2 பேரிடர்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

click me!