அடுத்த 24 மணி நேரத்திற்கு அதகளம் பண்ண வரும் மழை !! சென்னையில் செம்ம காட்டு காட்டுமா?

By sathish kFirst Published Nov 21, 2018, 1:47 PM IST
Highlights

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் பெருமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் பெருமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

அதில், “காற்றழுத்தத் தாழ்வு நிலையானது சென்னை- புதுச்சேரி இடையே கரையைக் கடந்தால் வட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும். கடலூரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. சென்னை, புதுச்சேரியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை காற்று வீசும். புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்” என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெருமழை முதல் மிகப் பெருமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெருமழை முதல் மிகப் பெருமழை வரை பெய்யும் என்று தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், உள்மாவட்டங்களில் 50 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன். "வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும்.

கடந்த 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் இன்று தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்" என்று தெரிவித்தார் பாலச்சந்திரன்.

click me!