கொரோனா இறப்பை குறைத்துக் காட்டி நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியமில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூயிருக்கிறார்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 7,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 34,04,762 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது முந்தைய தின பாதிப்பைவிட குறைவாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்குள் வந்துள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 23,938 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 32,28,151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நேற்று மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,733 ஆக உயர்ந்துள்ளது.
undefined
இதுவரை 6,24,01,480 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 1,26,701 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,38,878 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 19,86,820 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 4,338 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கடலூரில் 18 வயதிற்கு மேல் உள்ள உள்ளவர்களில் 100 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். 89 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். மேலும் 15 முதல் 18 வயது கூடியவர்கள் 78% பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். அவர் இளைஞர்களில் 18 முதல் 44 வயது உடைய 40 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர்.
அடுத்து வரும் இரண்டு முதல் மூன்று வார காலம் என்பது மிக முக்கியமான காலம் என்பதால் பொதுமக்கள் அதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளோம். உலகளவிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இதற்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை.
நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவிலும், டிசம்பரில் மும்பையிலும் ஓமிக்ரான் வகை கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வந்ததால் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அப்போது, தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் அளித்து வரும் ஒத்துழைப்பு தான் காரணம்.
எனவே, வரும் நாட்களிலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சோப்பு போட்டு கைகளை சுத்தப்படுத்துவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். இரண்டாவது அலையின் போது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடம் கிடைக்காத நிலை இருந்ததை அனைவரும் அறிவார்கள். தற்போது அந்த நிலை இல்லை. அதேப்போன்று, கொரோனா மரணங்களை தமிழக அரசு குறைத்து காண்பிக்கவில்லை.
கொரோனா இறப்பை குறைத்துக் காட்டி நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியமில்லை, நோயை ஒழித்து நல்ல பெயர் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. கொரோனா காலத்தில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு பிறகு வேறு காரணங்களால் இறந்தவர்களையும் கொரோனாவினால் இறந்தவராக கருதியே அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கி வருகிறது. அதனால், கொரோனா மரணம் குறித்து மறைப்பதற்கு ஏதுமில்லை’ என்று கூறினார்.