மருந்தில்லா பிரசவ பயிற்சி அளித்த ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்!!!

By vinoth kumarFirst Published Aug 12, 2018, 10:18 AM IST
Highlights

மருந்தில்லா பிரசவ பயிற்சி நடத்த முயன்ற ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் வீடியோவை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் திருப்பூரில் கிருத்திகா உயிரிழந்தார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மருந்தில்லா பிரசவ பயிற்சி நடத்த முயன்ற ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் வீடியோவை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் திருப்பூரில் கிருத்திகா உயிரிழந்தார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சுவடு மறைவதற்குள் வீட்டில் இருந்தபடியே பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சியை நிஷ்டை என்ற அமைப்பின் தலைவர் ஹீலர் பாஸ்கர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினார். இதுதொடர்பாக ஹீலர் பாஸ்கரிடம் குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆலோசனை கட்டணமாக தலா ரூ5,000 என பலரிடம் பாஸ்கர் வசூலித்ததாக தெரியவந்தது. 

இதுதொடர்பாக வந்த புகாரையடுத்து கடந்த 2ம் தேதி ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் ஆகிய இருவரும் குனியமுத்தூர் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹீலர் பாஸ்கர் கைதுக்கு வரவேற்பு ஒருபக்கம் என்றாலும், மறுபக்கம் எதிர்ப்பும் இருந்தது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர், ஹீலர் பாஸ்கர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த கைது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு முற்றிலும் எதிரானதாகும் என்று சீமான் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி 2 பேரும் கோவை 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அடுத்த 30 நாட்கள் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

click me!