
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 52 ஆயிரம் விவசாயிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது:
“நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழையளவு 814.80 மி.மீ. ஏப்ரல் மாத இயல்பான மழை அளவு 59.8 மி.மீ. ஆனால் நேற்று முன்தினம் வரை 15.52 மி.மீ. மழை மட்டுமே கிடைத்துள்ளது.
மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்பட 11 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தற்போது 8.5 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 37.3 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. தற்போது நீர் இருப்பு குறைவாக இருக்கிறது.
பருவமழை பொய்த்து விட்டதால் குளங்கள் வறண்ட நிலையில் காணப்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 518 குளங்கள் உள்ளன. அதில் 2 ஆயிரத்து 506 குளங்கள் வறண்டு விட்டன.
மாவட்டத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.30 கோடியே 26 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 52 ஆயிரம் விவசாயிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். தற்போது வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். மீதி உள்ள விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.
நிவாரண தொகை வழங்கப்பட்டவர்களின் பட்டியல், அந்தந்த பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்படும். மேலும் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். நிவாரணம் கிடைக்காத விவசாயிகள் மனு செய்யலாம். அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பேசினார்.