
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்தது ஒதுங்கி இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி ஆக்டிவாக இருந்திருந்தால், தற்போதைய அரசியல் சூழ்நிலையே மாறியிருக்கும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி-கஸ்தூரி தம்பதியரின் முத்து விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின், இன்றைக்கு தமிழகத்தில் எந்த துறையில் பார்த்தாலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அரசு துறைகளில் எந்த இடத்தில் ஊழல் நடந்தாலும் அதை வெளிக்கொணர அங்குள்ள திமுக உணர்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அது குறித்து தன்னிடம் துப்பு கொடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சென்னையில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது, மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி விவாதிக்க அமைச்சர்கள் கூடவில்லை. ஆனால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு யாரை முன்னிறுத்தி வசூல் செய்வது? யாருடன் சேர்ந்து ஆட்சியில் கொள்ளையடிப்பது? என்பதுதான் போன்ற நடவடிக்கைகளில் மட்டுமே அமைச்சர்கள் ஆர்வத்துடன் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி மட்டும் ஆக்டிவாக இருந்திருந்தால், தற்போதைய அரசியல் சூழ்நிலையே மாறியிருக்கும் என்றும் ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.