
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு துணையாக தினகரனும் சிறைக்கு செல்வார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக இரண்டாக உடைந்ததன் பின்னணியில் பாஜக இருக்கிறது என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது, ஓபிஎஸ் நடத்தும் அத்தனை நாடகத்தின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது என்றே பேசப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் பாஜக தமிழக தலைவர் தமிழிசை, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கேசிய செயலாளர் எச்.ராஜா போன்றோர் ஊடகங்கள் மத்தியில் பேசுவது அப்படியே நடந்து வருகிறது.
அதிமுக உடையும் என்று சொன்னார்கள்…உடைந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்வார் என்று சொன்னார்கள்….அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் என்று சொன்னார்கள்…முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள்…ரத்து செய்யப்பட்டது.
இப்படி பாஜக தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அது கரெக்ட்டாக நடந்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளார். சசிகலாவுக்கு துணையாக அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள தினகரனும் சிறைக்கு செல்வார் என்று தெரிவித்தார்.
அண்மை காலமாக பாஜக தலைவர்கள் கூறுவது அனைத்தும் நடந்தேறி வருகிறது என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படும் நிலையில், தினகரன் சிறை செல்வது உறுதி என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளதால் அடுத்து தினகரன் சிறைக்கு செல்வாரா என எதிர்பார்க்க வைத்துள்ளது.