சொகுசு காரில் வலம் வந்து போதை பொருட்கள் விற்பனை - வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்!!

First Published Jul 27, 2017, 12:37 PM IST
Highlights
gutka business in car


டெல்லியில் போதை பொருட்களை வாங்கி, சொகுசு காரில் பல மாநிலங்களில் விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே, தண்டையார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி பதிவு எண் கொண்ட சொகுசு கார், அவ்வழியாக வந்தது.

அதை போலீசார் தடுத்து நிறுத்தி, காரில் இருந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, காருடன் சேர்த்து 2 வாலிபர்களையும், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், பெங்களூரை சேர்ந்த ஹேமந்த் (25), சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (25) என தெரிந்தது.

மேலும், டெல்லியில் போதை குட்கா பாக்குகளை பல லட்சத்துக்கு வாங்கி, அந்த மாநிலத்திலேயே சொகுசு காரை வாடகைக்கு எடுத்து கொண்டு, பெங்களூர்,ஐதராபாத், சென்னை என பல இடங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது. காரில் இருந்த பொருட்களின் மொத்த மதிப்பு பல லட்சம் என கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்து, சென்னையில் இவர்களுக்கு ஏஜென்ட் யார், மொத்தமாக பதுக்கி வைக்கும் இடம் எங்குள்ளது என்பது உள்பட பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காரிலேயே ஊர், ஊராக போதை குட்கா பொருட்களை விற்பனை செய்த 2வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!