
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு வழக்கில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதில் தவறு உள்ளது என்றும் அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த, சட்டவிரோத கிரானைட் குவாரி குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சென்னை உயர் நீதிமன்றம், கேட்டுக் கொண்டது.
இதையடுத்து 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சகாயம் தலைமையிலான குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது.
இதுதொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், சகாயம் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமிக்கும் முன்பே, தமிழக அரசு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டது என குறிப்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சகாயம் குழு அளித்த 212 பரிந்துரைகளில் 131 பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 67 சதவீத பரிந்துரைகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதால் அந்தப் பரிந்துரைகளை நிராகரித்துள்ளோம்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பெறாமல் எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சகாயம் குழு அளித்துள்ள பரிந்துரையில் நியாயம் இல்லை. எனவே, இதில் சிபிஐ விசாரணை தேவையில்லை' என தனது பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மிகுந்த சிரமத்துக்கிடையே ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவினர், விசாரணை செய்து தாக்கல் செய்த அறிக்கை மற்றும் அதில் உள்ள உண்மையை மறைக்க தமிழக அரசு முயல்வதாகவும், இந்த முறைகேடு வழக்கை ஊத்திமூட முயற்சி செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.