அம்மாவுக்காக, பாட்டியை கொடூரமாக கொன்ற பேரன்... போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்...

First Published May 29, 2018, 10:00 AM IST
Highlights
grandson killed his grandmother for his mother


திருநெல்வேலி
 
திருநெல்வேலியில் தனது அம்மாவை தவறாக பேசியதால் பாட்டியை சேலையில் கழுத்தை நெறித்து கொன்ற பேரனை காவலாளர்கள் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜநகர் டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம் (82). தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வரும் இவருடைய மனைவி அந்தோணியம்மாள் (79). இவர்களுடைய மகன்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். 

ஞானபிரகாசம், அந்தோணியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி இரவு ஞானபிரகாசம் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது அந்தோணியம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். 

மறுநாள் காலையில் பார்த்தபோது, அந்தோணியம்மாள் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்தோணியம்மாள் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து காவலாளர்கள் நடத்திய விசாரணையில் அந்தோணியம்மாளை அவருடைய பேரன் ஞானராஜ் (19) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து அவரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். ஞானராஜ் காவல் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தார். அதில், "நான் எனது பாட்டி அந்தோணியம்மாளை அவ்வப்போது சந்தித்து பேசுவேன். சம்பவத்தன்று பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். 

அப்போது அவர் சித்தப்பா சார்லஸ் மறைவுக்கு உனது சித்திதான் காரணம் என்று என்னிடம் கூறினார். மேலும், எனது அம்மாவை பற்றியும் தவறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்து பாட்டியை பிடித்து கீழே தள்ளினேன். அவரது தலை சுவற்றில் மோதி இரத்த காயம் ஏற்பட்டது. 

அவர் கீழே விழுந்து மயங்கி கிடந்தார். நான் அவரது சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்தேன். இயற்கையாகவே கீழே விழுந்து மரணம் அடைந்ததுபோல் போட்டுவிட்டு அங்கு இருந்து ஓடிவிட்டேன்" என்று அவர் தெரிவித்தார். 

இதனையடுத்து காவலாளர்கள் ஞானராஜை திருநெல்வேலி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 
 

click me!