தமிழகத்தில் உள்ள அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப செயல்முறை நேற்று முதல் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன். இந்த கல்லூரிகளில் 1,07,395 இடங்கள் இளநிலை படிப்புகளில் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப்பதிவை தொடர்ந்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்பு பிரிவுக்கான சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் மே 29 வரை நடத்தப்படும்.
இதையும் படிங்க : தமிழகத்தில் என்ஐஏ ரெய்டு! சென்னை உள்பட 10 மாவட்டங்களில் நடக்கிறது
இதனையடுத்து முதல்கட்ட பொது கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9-ம் தேதி வரையும், 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20-ம் தேதி வரையும் நடைபெறும். சேர்க்கை முடிவடைந்த உடன், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி தொடங்கப்படும்.
ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கும் பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.50 செலுத்தினால் போதும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை. பதிவுக்கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும்.
கடந்த ஆண்டு அரசு கலை, அறிவியல் படிப்புகளில் சேர 2.98 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு அதைவிட கூடுதலான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முந்தைய ஆண்டுகளை போல, கல்லூரிகளில் தேவைக்கேற்ப மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 15% உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்