Republic Day 2022: 73-வது குடியரசு தினவிழா: முதல்முறையாக தேசிய கொடியை ஏற்றினார்.. கவர்னர் ஆர்.என்.ரவி !!

By Raghupati RFirst Published Jan 26, 2022, 8:39 AM IST
Highlights

குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என். ரவி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

இந்திய குடியரசுத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்பர். கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு,  இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.  

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும்,  கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும்  மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என். ரவி  காலை 8 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும் போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டது. 

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் கவர்னர் ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல்முறையாகும். சென்னை மெரினாவில் நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை கவர்னரை அறிமுகம் செய்து வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னையில் வரலாற்றை பறைசாற்றும் வகையில்  தமிழக அலங்கார ஊர்திகள் இடம் பெற்றது. சென்னையில் குடியரசு தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!