பன்வாரிலாலை கண்காணிக்கும் ’ரா’ அதிகாரிதான் ராஜகோபாலா?: கவர்னர் செயலரை சுற்றி சுழலும் சர்ச்சை புயல்!

By vinoth kumarFirst Published Sep 30, 2018, 2:21 PM IST
Highlights

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையற்ற விஷயங்கள்’என்று புதிதாய் துவங்கப்பட்ட தி.மு.க.வின் தலைவர் அண்ணா எப்பவோ புலம்பி பல்லாண்டுகாலம் ஆகிவிட்டது.

’ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையற்ற விஷயங்கள்’என்று புதிதாய் துவங்கப்பட்ட தி.மு.க.வின் தலைவர் அண்ணா எப்பவோ புலம்பி பல்லாண்டுகாலம் ஆகிவிட்டது. ஆனால் தி.மு.க.வுக்கு இப்போது மூன்றாவது தலைமுறை தலைவரே பதவியேற்றாச்சு ஆனாலும் ஆட்டுக்கு தாடியும் உதிரவில்லை, நாட்டுக்கு கவர்னர் பதவியும் ரத்தாகவில்லை. சரி சமகால பஞ்சாயத்துக்கு வருவோம்!... 

தமிழகத்தில் இதுவரை எந்த கவர்னர் பதவிக்கு வந்தபோதும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு, தற்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அறிவிக்கப்பட்ட போது வந்தது. அதை உருவாக்கியவர் சுப்பிரமணியம் சுவாமி. ’தமிழக கவர்னராக அறிவிக்கப்பட்டிருக்கும் புரோஹித் ஊழலுக்கு எதிரான பெரும் போராளி தளபதி.’ என்று ட்விட்டரில் தீ பற்ற வைத்தார். கவர்னரும் பதவியேற்ற சில நாட்களிலேயே தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். கையறு நிலையிலிருக்கும் ஆளுங்கட்சி இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் துவக்கத்தில் இருந்தே ‘கவர்னர்’ எனும் பதவியை எதிர்க்கும் எதிர்கட்சியான தி.மு.க.வோ இதை வன்மையாக கண்டித்தது. மாநில சுயாட்சி தத்துவத்துக்கு எதிராக பன்வாரிலால் நடக்கிறார் என்று அவர் ஆய்வுக்கு செல்லுமிடமெல்லாம் கறுப்புக் கொடியை காட்டி கைதாகிக் கொண்டிருக்கிறது.

 

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இதுவரையில் இருந்த கவர்னர் போல் இல்லாமல், வித்தியாச நபராக பன்வாரிலால் இருப்பார்! என்று எதிர்பார்க்கப்பட்டது நடந்திருக்கிறது. ஆனால் அது அவரது விஷயத்தில் அல்ல, அவரது செயலர் ராஜகோபால் விஷயத்தில். பன்வாரிலால் தமிழக கவர்னராக பதவியேற்ற சில நாட்களிலேயே மத்திய அரசு பதவியிலிருந்து மீண்டும் தமிழகத்துக்கு அழைக்கப்பட்டார் ராஜகோபால். ஏற்கனவே ஜெயலலிதாவின் பழைய ஆட்சிகாலத்தில் தமிழக அரசின் உச்ச பதவியிலிருந்து பல அதிரடிகளை சைலண்டாக செய்தவர் இவர். அ.தி.மு.க. அரசுடன் உருவான பஞ்சாயத்தினால்தான் இவர் டெல்லி பணிக்கே செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. 

அப்பேர்ப்பட்ட ரா.கோபாலை, ஜெ., இல்லாத ஆனால் அ.தி.மு.க. ஆளும் தமிழகத்துக்கு மீண்டும் மத்திய அரசு அனுப்பியது எடப்பாடியார் - பன்னீர் வட்டாரத்தின் வயிற்றில் புளி அல்ல புளியந்தோப்பையே கரைத்தது. தமிழகம் வந்து பன்வாரிலாலின் செயலராக ரா.கோ. பதவியேற்ற பின் பல அதிரடிகள் எதிர்பார்க்கப்பட்டன. பன்வாரிலால் எதேச்சையாக இட்ட சீர்திருத்த உத்தரவுகளின் பின்னணியில் ரா.கோ.வே இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டன. ஆனால், மாதங்கள் உருண்டோடிவிட்டன. ராஜகோபாலின் செயல்பாடுகளில் எந்த அதிரடியுமில்லை, புரட்சியுமில்லை. ஆளும் அரசுக்கு எதிராகவும், அமைச்சரவையின் சொத்து விபரம் குறித்தும் பல சர்ச்சைகள் உருவாகிவிட்டன.

எதிலும் ரா.கோ.வின் எந்த தலையீடுமில்லை. கவர்னருக்கு தமிழ் தெரியாத நிலையில், தமிழக நிலைகளை கண்காணித்து வாசித்து, அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ரா.கோ. உதவுவார் என்று கணிக்கப்பட்டது. சிம்பிளாக சொல்வதானால் கவர்னருக்காக ஒரு பூதக்கண்ணாடி போல் இயங்கி, அவருக்கு உதவுவார் என்றுதான் ரா.கோவை எதிர்பார்த்தனர். ஆனால் நடப்பதோ தலைகீழ்! இதுவரையில் எந்த கவர்னருக்கும் கடைப்பிடிக்கப்படாத ஒரு மரபு பன்வாரிலாலின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. அது, கவர்னருக்கு நிகராக ராஜகோபாலும் முன்னிலைப்படுத்தப்படுவது தான். தமிழக பல்கலை ஒன்றின்  புதிய துணைவேந்தருக்கு, நியமன சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் துவங்கி சுற்றுப் பயணம் வரை எல்லாவற்றிலும் கவர்னரின் வலது அல்லது இடது கரமாக நிற்கிறார் ரா.கோ. 

பத்திரிக்கைகள் எடுக்கும் படங்களில் மட்டுமல்லாது, கவர்னர் மாளிகையிலிருந்து வெளிவரும் அதிகாரப்பூர்வ போட்டோக்களிலும் கூட கவர்னர் அருகில் ராஜகோபால் நின்றபடியே வருகின்றன. அதாவது செயலர் இல்லாமல் கவர்னர் இல்லை! எனும் பிம்பம் வலிந்து உருவாக்கப்பட்டபடி இருக்கிறது. இது ஏன்? ஏன் இந்த புதிய மரபு? கவர்னரின் பின்னே அவருக்கு பாதுகாப்பு பணியிலுள்ள எஸ்.பி. கிரேடு ஐ.பி.எஸ். அதிகாரி நிற்பதுதானே மரபு ஆனால் பன்வாரிலால் விஷயத்தில் அது மாற்றப்பட்டு கவர்னரின் பாதியாக செயலர் நிற்பது ஏன்? என்று அரசியல் பார்வையாளர்கள் கடும் விமர்சனத்தை கிளப்புகின்றனர். 
 
இதுபோதாதென்று சமீபத்தில் கவர்னர் அலுவலகம் வரை தலை உருட்டப்பட்ட அருப்புக்கோட்டை நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிரான அதிருப்தியில் ரா.கோ.வின் தலையும் சேர்த்தே உருட்டப்பட்டதையும் அரசியல் விமர்சகர்கள் அடிக்கோடிட்டு காட்டுகின்றனர். தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சியினரோ ”உண்மையில் கவர்னர் பன்வாரிலாலுக்கு அரசு நிர்வாகத்தில் உதவுவதற்காக ராஜகோபால் பணியமர்த்தப்படவில்லை. மாறாக கவர்னரை கண்காணிக்கவும், அவர் எடுக்கும் முடிவுகளை மத்திய அரசுக்கு தெரிவிக்கவுமே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ராஜகோபாலின் ஒப்புதல் மற்றும் கவனிப்புக்கு ஆளாகாமல் கவர்னரின் எந்த முடிவும் அமலுக்கு வருவதில்லை! கவர்னர் எடுக்க துணியும் முடிவுகள் ராஜகோபால் வழியே டெல்லிக்கு சென்று அங்கே ஓ.கே.! ஆன பின் மீண்டும் அவர் வழியே கவர்னருக்கு கிடைக்கிறது  உண்மையிலேயே எதிர்பார்க்கப்பட்டது போல் கவர்னர்  பன்வாரிலால் பல புரட்சிகளை தமிழக அரசில், அரசியலில் செய்திடும் எண்ணத்தில்தான் இருக்கிறாராம். மெஜாரிட்டி இல்லாமல், மத்திய அரசின் புண்ணியத்தில் நகரும் தமிழக அரசுக்கு எதிராக அவர் சுழற்ற துணியும் வாளானது ரா.கோ.வினால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. சிம்பிளாக சொல்வதானால் பன்வாரிலாலுடன் இருக்கும் டெல்லியின் ‘ரா’ போன்ற உளவு அதிகாரிதான் ரா.கோ!” என்கிறார்கள். உண்மையா ராஜ்பவன்?

click me!