
நெருக்கடியான நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, கட்டுப்பாடான கலாச்சாரத்தை நாட்டிற்கு எடுத்துக்காட்டியுள்ள தமிழக மக்களுக்கு ஆளுநர் பாராட்டு!
தமிழக முதலமைச்சர் செல்விஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட துயரமான நேரத்தில், தமிழக மக்கள் அமைதிகாத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, கட்டுப்பாடான கலாச்சாரத்தை நாட்டிற்கு எடுத்துக்காட்டியுள்ளதாக தமிழக ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார். நெருக்கடியான நிலையிலும் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், காவல்துறையினரும் ஒப்பற்ற பணியை மேற்கொண்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையில், தமிழக மக்கள் அமைதிகாத்து, சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, அவர்களது கட்டுப்பாடான கலாச்சாரத்தை நாட்டிற்கே எடுத்துகாட்டியுள்ளதாக ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார். துயரமான நேரத்திலும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உட்பட ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும், ஒப்பற்ற பணியை உறுதியாக மேற்கொண்டதற்கு தனது பாராட்டை தெரிவித்துக்கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தனது பாராட்டை தெரிவித்து, தமிழக தலைமைச் செயலாளர் டாக்டர் P. ராம மோகனராவ் மற்றும் காவல்துறைத் தலைவர் திரு. T.K. ராஜேந்திரன் ஆகியோருக்கும் ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.
தலைமைச்செயலாளர் திரு. ராமமோகனராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவால், உணர்ச்சிப்பூர்வமான வெற்றிடம் ஏற்பட்ட நிலையில், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஒன்றுபட்டு உரிய நேரத்தில் ராஜாஜி அரங்கில் முதலமைச்சரின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர் - மெரினா கடற்கரையில் முதலமைச்சரின் இறுதி நிகழ்ச்சிகளுக்கு, காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் அனைத்து ஏற்பாடுகளையும், அர்ப்பணிப்புடன் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் மேற்கொண்டனர் - குறைந்த நேரத்திலும் துரிதமாக, மிகத் திறமையுடன் அரசு இயந்திரம் செயல்பட்டதால்தான் பிரம்மாண்ட மக்கள் திரளை ஒழுங்குபடுத்த முடிந்ததாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குடியரசு தலைவர், பிரதமர், 9 மாநில முதலமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என அனைவரும் முறையாக வரவேற்கப்பட்டு, பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்ட தமிழக பொதுத் துறைக்கும், இத்துறையின் முதன்மைச் செயலாளர் திரு. சிவதாஸ் மீனாவுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் பாராட்டை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.