
சிவகங்கை
ஓலா, யுபர் ஆகிய நிறுவனங்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில், சி.ஐ.டி.யு. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இதற்கு அதன் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன் தலைமைத் தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எம்.சிவாஜி,மாநில பொருளாளர் ஏ.பழனி,சிஜடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார்,சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.வீரையா,மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் சிவாஜி கூறியது:
"மோட்டார் வாகனச் சட்டப்படி ஆட்டோ ஒட்டுநர்களிடம் உரிமத்தை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
பன்னாட்டு நிறுவனம் ஓலா, யுபர் ஆகிய நிறுவனங்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
விபத்துக்களுக்கு குற்றவியல் நடைமுறைப்படி நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும்.
மாநாகராட்சி, நகராட்சியின் இடங்களுக்கு ஆட்டோ நிறுத்தங்களுக்கு வருடத்திற்கு ரூ.5000 கட்டணம், ஆட்டோவிற்கு ரூ. 500 வருடத்திற்கு செலுத்த வேண்டும் என்கிற புதிய உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஆட்டோத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடும் காவல்துறை அடக்குமுறையை கைவிட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு மே 11,12 ஆகிய நாள்களில் கோவையில் நடைபெற இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.