
விழுப்புரம்
விழுப்புரத்தில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறுக்கை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இரண்டும் சின்ன இடத்தில் மூன்று கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒரு ஆசிரியரும், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியரும் நிரந்தரமாக பல வருடங்களாக பணியாற்றுகின்றனர். மற்ற ஆசிரியர்கள் அவ்வப்போது மாறுதலாகி வெளியூர்களுக்கு சென்று விடுகின்றனர்.
இந்த இரண்டு பள்ளிகளிலும் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவ–மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளியை விட்டு வெளியே வந்து பள்ளி முன்பு உட்கார்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் அவர்களது பெற்றோர்களும், கிராம மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. அதுவரை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை வரவில்லை.
இதனால் கடுப்பான மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர், "ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வரை நாள்தோறும் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தனர்.