விமான நிலையத்திற்காக 570 ஏக்கர் விளைநிலத்தை பிடுங்க அரசு திட்டம்; போராட்டத்தில் குதித்த மக்கள்...

First Published Apr 3, 2018, 9:16 AM IST
Highlights
Government plans to Acquisition 570 acres of farm land for airport People struggle ...


சேலம்
 
சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 570 ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதை எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. இங்கிருந்து சேலம் - சென்னை இடையே விமானம் இயக்கப்படுகிறது. 

இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய சுமார் 570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக அளவீடு செய்யும் பணி முடிந்து, நில உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, சட்டூர், குப்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். 

இதனையடுத்து மனு கொடுக்க சென்றவர்களை ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற காவலாளர்கள் தடுத்து நிறுத்தினர். 

இதனைத் தொடர்ந்து மக்களிடம் காவலாளர்கள் கூறுகையில், "எல்லோரையும் உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதிக்க முடியாது. ஐந்து பேர் மட்டுமே ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்க முடியும்" என்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சேலம் உதவி ஆட்சியர் குமரேஸ்வரன், மாநகர துணை காவல் ஆணையர் சுப்புலட்சுமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது மக்கள், அதிகாரிகளிடம், "எங்களுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்பது குறித்து தகவல் பெறுவதற்காகதான் மனு கொடுக்க வந்தோம். எனவே, மனுகொடுக்க உள்ளே அனுமதிக்க வேண்டும்" என்றனர்.

இதனைக் கேட்ட அதிகாரிகள் அனைவரின் மனுவையும் நுழைவு வாயிலிலேயே பெற்றுக்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், எல்லோரும் அமைதியான முறையில் மனுவை கொடுத்துவிட்டு செல்லுமாறும் தெரிவித்தனர். 

இதில் சமாதானமடைந்த மக்கள் தாங்கள் கொண்டுவந்த மனுக்களை வரிசையாக நின்று அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதில் ஒரு மனுவை அதிகாரிகள் பெற்றுக் கொண்டும் மற்றொரு மனுவில் சீல் வைத்தும் அவர்களிடம் கொடுத்தனர். 

இதுகுறித்து மக்கள், "எங்கள் கிராமத்தில் நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இது விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்துக் கொண்டிருக்கும் எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் உள்ளது. 

சுமார் 570 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. எங்களுக்கு விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாது. இங்குள்ள நிலங்கள் அனைத்தும் அமோக விளைச்சல் உள்ள நீர்பாசன வசதியுள்ள நிலங்களாகும்.

இத்தகையை சூழ்நிலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் வாழ்வாதாரம் கேள்விகுறியாகும். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்குரிய நியாயமான இழப்பீடு தொகையையும், வேலை வாய்ப்பினையும் கொடுக்கவில்லை. 

எனவே, ஆட்சியர் எங்களின் கோரிக்கையினை ஏற்று நிலம் கையகப்படுத்தும் முடிவினை கைவிட வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.
 

click me!