
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்
தமிழகத்தில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டு மற்றும் பேருந்தின் மேற்பகுதியில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் பேருந்து படிகட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதை பள்ளி ஆசிரியர்கள் தடுக்க வேண்டும் என்றும் இதே போல பேருந்து ஓட்டுநர்களும் மாணவர்களை படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொண்டுள்ளது. இருந்த போதும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர்.
மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை
இந்தநிலையில்,சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்படும் நேரம், வந்து கொண்டு இருக்கும் இடம் ஆகியவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Chennai Bus என்ற புதிய செயலியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 3ஆயிரத்து 454 மாநகர பேருந்து ஓடுகிறது. எல்லா பேருந்திலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னை பேருந்துகள் இயக்கத்தை சென்னை பஸ் செயலி மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யபட்டுள்ளது. பேருந்து எந்த நேரம் வரும் என்பது குறித்து இனி இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும் என கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் பயணிக்கும் நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தானியங்கி கதவுடன் பேருந்து
புதிய பேருந்துகள் வாங்கும் போது தானியங்கி கதவுடன் வாங்க திட்டமிட்டு உள்ளோம். கிராமபுரங்களில் இவ்வகை பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கபடும்.பெண்களுக்கான இலவச பேருந்துகள் சில இடங்களில் நிறுத்துவதில்லை என்ற புகார் குறித்து பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.