
சென்னை அரசு மருத்துவனை அருகே சுகாதாரம் இல்லாத உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. விதிமுறைகளை மீறி மாநகர பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சுரங்கப்பாதையை பயன்படுத்தாமல், மக்கள் சாலையை கடக்கின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதேபோல் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலைக்காகவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திரா, மாநிலம் தடா, நெல்லூர், குண்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை அமைந்துள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாகவும், கடும் போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும்.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும் மக்கள், சாலையை கடப்பதற்காக சுர்ங்கப்பாதை உள்ளது. ஆனால், இதை யாரும் பயன்படுத்துவதே கிடையாது. வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிக்னல் பகுதியில், ஆபத்தான முறையில் சாலையை கடக்கின்றனர்.
மேலும், அரசு பொது மருத்துவமனையின் வெளியே மாநகர பஸ்கள் நிறுத்துவதற்காக நிறுத்தங்கள் உள்ளன. ஆனால், பஸ்கள் அங்கு நிறுத்தாமல், அண்ணா சாலைக்கு செல்லும் மேம்பாலம் கீழ் பகுதியில், மருத்துவமனை நுழைவாயிலில் நிறுத்தப்படுகின்றன. இதனால், அங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
இதுபோல் நிறுத்தத்தில் நிற்காமல், விதிமுறை மீறி மருத்துவமனை நுழைவாயிலில் பஸ்கள் நிற்பதை போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால், அங்கு விபத்துகள் அதிகரிக்கிறது.
இதுபோதாத குறைக்கு, மேம்பாலத்தின் பாதி அளவு வரை ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதுபோன்று ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதையும் போலீசார், கேட்பதில்லை. அவர்களிடம் கையூட்டு பெற்று கொண்டு, கண்டும் காணாமல் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக அரசு பொதுமருத்துவனை வெளியே சுரங்கப்பாதை அருகில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. இதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்கள், வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதனால், நோயாளியை பார்க்க வருபவர்களுக்கு நோய் ஏற்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை உள்ளது. இதனை அருகில் உள்ள மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. சுகாதார சீர்க்கேட்டை தடுக்க வேண்டிய மருத்துவமனையும் திரும்பி பார்க்காமல் உள்ளது.
எனவே, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை இடையே சாலையை கடக்கும் பொதுமக்களை தடுக்க வேண்டும். விதிமுறைக்களை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
முறையான இடத்தில் நிறுத்தாமல், அரசு மருத்துவமனை அருகே நிறுத்தப்படும் மாநகர பஸ்களுக்கு தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது துறை நீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் மக்களை, போலீசார் அப்புறப்படுத்த வேண்டும்.
அதே பகுதியில் நிறுத்தும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மருத்துவமனை அருகே சுகாதாரம் இல்லாமல் உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
இதற்கு போலீசார், மாநகராட்சி, சுகாதார துறையினர் முழுமையாக ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.