தமிழக அரசு மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
நாமக்கல்
தமிழக அரசு மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று நாமக்கல்லில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
undefined
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலச் செய்தி ஆசிரியர் மருத்துவர் இரங்கநாதன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் மருதுவர் லீலாதரன், மாவட்டச் செயலாளர் மருத்துவர் இரகுகுமரன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் மருத்துவர் கார்த்திக்கேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "தமிழக அரசின்கீழ் பணிபுரியும் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நாற்பக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலச் செய்தி ஆசிரியர் மருத்துவர் இரங்கநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், "எங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதன்படி இன்று (அதாவது நேற்று) நாமக்கல்லில் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
இதேபோன்று, வரும் 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மருத்துவர்கள் அனைவரும் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். அதனைத் தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம்.
எங்களின் எந்த போராட்டத்திற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்வோம். செப்டம்பர் 21-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்று அவர் எச்சரித்தார்.