
கரூர்
கரூரில் அரசுப் பேருந்தின்மீது கல் வீசியதில் அதன் கண்ணாடி தூள் தூளாக உடைந்தது. இதுகுறித்து விசாரணையில் கல்வீசிய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை காவலாளர்கள் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து கடந்த திங்கள்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று நங்கவரம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது.
அந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநரான கருங்கலாப்பள்ளியைச் சேர்ந்த ராஜசேகரன் (32) ஓட்டிச் சென்றார்.
நங்கவரம் பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது அந்தப் பேருந்தின் பின்புறக் கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டதில் தூள் தூளாக உடைந்தது.
இதுகுறித்த குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர்கள் குளித்தலை மாடுவிழுந்தான்பாறை பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரெங்கராஜ் (46), நங்கவரம் தெற்குபட்டியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துநர் முருகேசன் (42) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்த குற்றத்திற்காக அவர்கள் இருவரையும் காவலாளர்கள் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடந்து வருகின்றது.