
தூத்துக்குடி
அனைத்து குளங்கள், ஏரிகளையும் அரசால் தூர்வார முடியாது. எனவே, அந்தந்த பகுதிகளில் மக்கள், இளைஞர்கள் இணைந்து குளங்கள், ஏரிகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று நடிகர் விவேக் கூறினார்.
நடிகர் விவேக், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலையில் உள்ள தனது குலதெய்வ கோவிலான அலங்கார அம்மன் உடனுறை கருப்பசாமி கோவிலுக்கு சென்று சாமியைக் கண்டார்.
பின்னர், அவர் அங்கு தேசிய ஊரக தொழிலாளர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீண்ட நாள்களாக ரசிகர்கள் எதிர்ப் பார்த்தனர். ஒவ்வொரு முறையும் அவர் அரசியலுக்கு வருவது போன்று தோன்றினாலும் அது ஏமாற்றத்துடன் முடிந்து போகும். ஆனால், தற்போது அவர் அரசியலுக்கு வந்து விடுவார் என்ற அறிகுறிகள் தெரிகின்றன.
இது ஜனநாயக நாடு. வந்தவரை வாழ வைக்கும் நாடு. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது, அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் அரசியலுக்கு வருவதை நான் முழு மனதுடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறேன்.
கோவில்பட்டி பகுதியில் மழை இல்லாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு சொட்டு மழைநீரைக் கூட வீணாக்காத வகையில் சேமித்து வைக்க வேண்டும். மரக் கன்றுகளை நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்.
நான் பல இலட்சம் மரக் கன்றுகளை நட்டுள்ளேன். அனைத்து குளங்கள், ஏரிகளையும் அரசால் தூர்வார முடியாது. எனவே, அந்தந்த பகுதிகளில் மக்கள், இளைஞர்கள் இணைந்து விடுமுறை நாள்களில் குளங்கள், ஏரிகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று அவர் கூறினார்.
“குளங்கள், ஏரிகள், கால்வாய்களை கண்டுக்காமல் விட்டு, அதனை அசுத்தப்படுத்ட காரணமாக இருந்தது அரசு தானே. அப்படியென்றால், அதனை சுத்தப்படுத்தும் பொறுப்பு அரசிற்கு இருக்கிறது அல்லவா. தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மழை நீரை சேமித்து வைப்பது எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். வருடா வருடம் பக்கத்து மாநிலத்திடம் தண்ணீர் கேட்டு நாம் போராடுகிறோம். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறும் மாநிலத்தை தட்டிக் கேட்க மறுக்கிறது.
குளங்கள், ஏரிகளை தூர்வாருவது அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்று. அதனையே அரசால் செய்ய முடியாது என்றால் எதற்கு அரசு என்ற கேள்வி எழும்தானே. அரசால் முடியாது அதனால் நீங்கள் செய்யுங்க என்கிறார் விவேக். இது என்னங்க நியாயம்” என்று பேசிக்கொண்டே நகர்ந்தனர் அப்பகுதி இளசுகள்…