திருப்பூர் அருகே தலைமையாசிரியை மீது பாய்ந்தது வழக்கு.. மாணவிகள் கொடுத்த புகாரில் அதிர்ச்சி..

By Thanalakshmi VFirst Published Dec 25, 2021, 6:04 PM IST
Highlights

திருப்பூரில் குழந்தைகளை கழிவறை கழுவ வைத்ததாக புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி பெண் தலைமை ஆசிரியர் கீதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

திருப்பூர் அருகே உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார். இங்கு 14 ஆசிரியர்கள், இரண்டு பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இடுவம்பாளையத்தை சேர்ந்த கீதா (45) என்பவர், கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுழற்சி முறையில் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் கீதா, மாணவ, மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக மாணவ, மாணவியர் முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷூக்கு புகார் அளித்தனர்.தொடர்ந்து, சாதிப் பெயரை குறிப்பிட்டு பேசுவதாகவும், பள்ளியில் உள்ள கழிவறையை ஆதிதிராவிடர் குழந்தைகளை வைத்து கழுவ வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், கடந்த வாரம் இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் கீதாவை பணியிடை நீக்கம் செய்தார்.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சரவணக்குமார் என்பவர், தலைமை ஆசிரியர் கீதா மீது மங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். அதன்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் கீதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

click me!