வானிலிருந்து விழுந்த மர்ம பொருளின் மர்மம் நீங்கியது…

 
Published : Nov 21, 2016, 10:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
வானிலிருந்து விழுந்த மர்ம பொருளின் மர்மம் நீங்கியது…

சுருக்கம்

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் ஐரோப்பாவுக்கு சொந்தமான வேகா என்னும் வகை இராக்கெட்டின் பாகம் என இஸ்ரோ விஞ்ஞானி தகவல் தெரிவித்து மர்மத்தை நீக்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி பஞ்சாயத்து மோதுப்பட்டி கிராமத்தில் உள்ளது களத்துக்காட்டு தோட்டம். அந்த பகுதியில், கடந்த 2–ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் வானத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று தரையில் வந்து விழுந்தது. இதனால், பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.

முதலில், விமானத்தின் பாகமாக இருக்கலாம் என எண்ணினர். ஆனால், அந்த மர்ம பொருள் விமானத்தோடு தொடர்புடையது அல்ல என விமான போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்தது.

அந்த பொருள் என்னவாக இருக்கும் என்பதை அறியும் ஆவல் அனைவரிடமும் தொற்றியது. பின்னர், அந்த மர்ம பொருள் விண்வெளியில் இருந்து விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் எண்ணினர். இதனால், இஸ்ரோவிற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மர்ம பொருளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த மர்ம பொருள் வெளிநாட்டு இராக்கெட்டில் கியாஸ் நிரப்ப பயன்படுத்தப்படும் பொருள் என தெரிவித்தனர். ஆனால், அது எந்த நாட்டு இராகெட்டின் பாகம் என்பதை அவர்கள் உறுதி செய்யவில்லை.

பிறகு, அந்த பொருளை இஸ்ரோ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அந்த பொருளை அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், அது ஐரோப்பாவுக்கு சொந்தமான ஒரு இராக்கெட்டின் பாகம் என்பது தெரியவந்தது.

“ஒட்டன்சத்திரம் அருகே வானத்தில் இருந்து விழுந்த பொருளை ஆய்வு செய்து வருகிறோம். தற்போது, அது ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘யுரோபியன் ஸ்பேஸ் ஏஜென்சி’க்கு சொந்தமான ‘வேகா’ என்னும் வகை இராக்கெட்டின் பாகம் என்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக எந்த ஒரு பொருளாக இருந்தாலும், விண்வெளியில் இருந்து விழும்போது, வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும் எரிந்து சாம்பலாகிவிடும். 100 சதவீதம் முற்றிலும் எரிந்துவிடும்.

ஆனால், அபூர்வமாக சில பொருட்கள் எரியாமல் பூமியில் விழுவதும் உண்டு. அதே போல தான் வளிமண்டலத்தில் இருந்து இந்த இராக்கெட்டின் பாகம் விழுந்துள்ளது.

அந்த பொருள் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது? நமது நாடு தயாரிக்கும் இராக்கெட்டின் பாகத்துக்கும், இதற்கும் உள்ள வேறுபாடுகள், பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது.

இதே போல, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் விழுந்த பொருளும், இதே இராக்கெட்டின் பாகம்தான்” என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!