
கடலூர்
பத்து நாள்கள் தொடர் பணிக்கு பின்னர் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் பரபரப்புடன் இயங்கிய வங்கிகள் வெறிச்சோடின. ஏ.டி.எமிலும் பணம் இல்லாததால் மக்கள் அவதி.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை டிசம்பர் 30-க்குள் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார் மோடி.
புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே வங்கிகளில் விநியோகம் செய்யப்படுகிறது. 500 ரூபாய் நோட்டை கூகுளில் புகைப்படமாக பார்த்ததோடு சரி. இன்னும் கையில் தரவில்லை. ப்ளான் பண்ணாமல் பண்ணா இப்படி தான் என்று வலைத்தளத்தில் கேளிக்கு ஆளாகிறார் மோடி.
ஏ.டி.எம். மையங்களில் குறைந்த அளவில் மட்டுமே பணம் நிரப்பப்படுவதால் அவை விரைவில் தீர்ந்து போய்விடுகிறது. இதனால் வரிசையில் காத்திருப்பவர்களில் பெரும்பாலவர்களுக்கு பணம் கிடைப்பதில்லை.
அவர்கள் கால் கடுக்க நின்று விட்டு, கடுப்பாகி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விடுகின்றனர் கடந்த 10 நாள்களாக.
இன்னொரு பக்கம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கியவர்கள், அதை மாற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
ரூபாய் நோட்டுகள் செல்லது என்ற அறிவிப்பு வெளியானதுக்கு பின்னர் வங்கிகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கின. அதாவது கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வங்கிகள் செயல்பட்டன. வங்கி ஊழியர்கள் அனைவரும் ஓய்வின்றி பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியாமலும், பணம் டெபாசிட் செய்ய முடியாமலும் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.
அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுப்பதற்காக அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டிருந்தன. திறந்து இருந்த சில ஏ.டி.எம். மையங்களிலும் விரைவில் பணம் தீர்ந்து விட்டது. மதிய நேரத்துக்கு பிறகு ஏ.டி.எம். மையங்கள் திறந்து இருந்தும் பணம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மாலை வரை இதே நிலையே நீடித்தது.