
சாக்கடை மனிதக் கழிவுகளின் எச்சம் என்று நாம் முகம் சுழித்து விலகிச் செல்வதுண்டு.. அறுவருப்பின் உச்சம் என்று நாம் கருதிய சாக்கடை நூற்றுக் கணக்கான மக்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை போக்குகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா....சாக்கடையோடு மல்லுக்கட்டி தங்கத்தை வேட்டையாடும் சாமானியர்களின் கதை இது....
கொங்கு மண்டலமான கோவை மாவட்டத்தில் உள்ளது உக்கடம்.... பகல் முழுவதும் இயந்திர வாகனங்களை சுமக்கும் இப்பகுதிச் சாலை இரவானால் மாட்டு வண்டிகளுக்கும் மனதார இடம் அளிக்கிறது.
50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் எறும்புகளைப் போல அணிவகுத்துச் செல்கின்றன. நடுநிதியில் இவ்வண்டிகள் எங்கு செல்கின்றன என்ற கேள்வி இக்கட்டுரையை படிக்கும் வாசகர்களாக உங்களின் மனதில் எழுவது இயல்பு....
காலை 7 மணி அளவில் பேரூர் சாலையில் உள்ள ஒதுக்குப்புற இடத்தில் அவ்வண்டிகள் நிற்க...நாமும் அம்மனிதர்களை பின்தொடர்ந்தோம். சுற்றிலும் சிறு சிறு குடிசைகள்.. ஒவ்வொரு குடிசையிலும் தலா ஒரு பெண் அமர்ந்திருக்க அக்கழிவு மண் அவர்கள் முன் கொட்டப்படுகிறது...தென் ஆப்பிரிக்காவில் உள்ள சுரங்கங்களில் ஊழியர்கள் தங்கம் எடுப்பதைப் போல இப்பெண்களும் சாக்கடையில் இருந்து தங்கம் எடுக்கும் பணியை ஆரம்பிக்கின்றனர்.
சாக்கடையில் தங்கமா?
கோவை மாநகர் நெசவுத் தொழிலுக்கு மட்டும் அல்ல தங்கநகைப் பட்டறைகளுக்கும் பிரசித்து பெற்றவை... தெருவுக்கு தெரு, என உக்கடம் நகர் முழுவதும் நகைக்கடைகளால் சூழப்பட்டுள்ளது. உற்பத்தியின் போது சிதறும் சிறு தங்கத் துகள்கள் நீரின் மூலம் சாக்கடையில் கலந்து இறுதியில் இம்மனிதர்களின் கைகளில் பொக்கிஷமாக சென்றடைகிறது.... ஒரு வார கால கடும் உழைப்பிற்கு பின்னர் குண்டுமணி அளவுக்கு தங்கத்தை சேர்க்கும் இம்மனிதர்கள் அதை அதே நகைக்கடையில் விற்று வாழ்ந்து வருகின்றனர்.
தேடல் என்ற வேட்கை இவர்களுக்கு பலமாக இருந்தாலும் சுகாதாரம் பலவீனமாகவே உள்ளது....