
பாளையங்கோட்டை மகாராஜா நகரை சேர்ந்தவர் பாபு. பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இவருக்கு சொந்தமான நகை கடை ஒன்று உள்ளது.
நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பினர். பின்னர் நம்பி, சுந்தரம் ஆகிய 2 இரவு காவலர்கள் பணியில் இருந்தனர்.
இன்று காலையில் கடை உரிமையாளர் பாபு கடையை திறக்க வந்தபோது, நகைக்கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பாபு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நகைக்கடையின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 20கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள சித்தூர் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில், போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் 60 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.
பின்னர், வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் இருந்து இறங்கி தப்பி வணபகுதிக்குள் ஓடி விட்டனர்.
அவர்களைப் பிடிக்க சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் வனப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.