
கன்னியாகுமரி
கட்டிட தொழிலாளியின் மனைவியிடம் தோழிபோல நடித்து வீட்டில் இருந்த 30 சவரன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற இளம்பெண்ணை காவலாளர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். கட்டிட தொழிலாளியான இவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி லீலா மேரி. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியூர் செல்வதற்காக திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு இளம்பெண் லீலா மேரியிடம் நைசாக பேச்சு கொடுத்து அறிமுகமானார்.
லீலா மேரியின் குடும்ப சூழ்நிலையை ஒவ்வொன்றாக கேட்டு அவருக்கு அந்த பெண் ஆறுதல் கூறினார். அதன்பின்பு இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி தோழிகள் ஆனார்கள்.
லீலாமேரிக்கு மாந்திரீகத்தில் நம்பிக்கை இருப்பதையும் அந்த பெண் அறிந்து கொண்டார். தனக்கு மாந்திரிக வேலைகள் தெரியும் என்றும் பரிகார பூஜைகள் செய்தால் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்றும் லீலா மேரியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி லீலா மேரி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்தார். பூஜையின்போது, வீட்டில் உள்ள நகைகள், ரொக்க பணம் ஆகியவற்றை வைக்க வேண்டும் என்றும், பூஜைகள் முடிந்த பின்பு அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அந்த பெண் கூறினார்.
இதையும் நம்பிய லீலா மேரி வீட்டில் இருந்த 30 சவரன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்து பூஜையில் வைத்துள்ளார். பூஜை நடந்து கொண்டிருந்தபோது, ஏதோ மை போன்ற பொருளை எடுத்து லீலா மேரியின் மீது வைத்ததால் அதன்பின்னர் லீலா மயக்க நிலைக்கு சென்றுவிட்டாராம்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 30 சவரன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இளம்பெண் மாயமானார்.
மயக்கம் தெளிந்த பின்னர் லீலாமேரி எழுந்து பார்த்த போதுதான், தோழியாக நடித்து தன்னை ஏமாற்றிய பெண் நகை - பணத்தை அபகரிக்க வந்தவர் என்பது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து லீலா மேரியை ஏமாற்றிய இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.