
சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள லட்சுமி லாட்ஜில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ஆய்வில் ஆர்,கே,நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை ஆர்,கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகர் சரத்குமார்,முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், மற்றும் எப்எல்ஏ ஹாஸ்டல், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 35 இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகைளை செய்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேசன் எதிரே உள்ள லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ளனர்.
அந்த லாட்ஜுக்குள் புகுந்த வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். அங்கு ஆர்.கே.நகரில் வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்த 400 டோக்கன்கள் கைப்பற்றப்பட்டன. ஒவ்வொரு டோக்கனின் திப்பும் 5000 ரூபாய் என கூறப்படுகிறது.
மேலும் பணப்பட்டுவாடா தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.