தலைமை செயலாளர் நியமனம்...!! நியாயம் வென்றதா?

First Published Dec 22, 2016, 1:33 PM IST
Highlights


தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டில் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து அவரை தலைமை செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய தமிழக அரசு , நேர்மையான தகுதியான ஒருவரை நியமித்துள்ளது. 

தமிழக அரசியலில் சார்பு ஐஏஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் நிலைபாடு காரணமாக ஒட்டுமொத்த நிர்வாகமே ஊழலில் புரையோடி போயுள்ளது எனபதற்கு உதாரணமே சமீப கால நிகழ்வுகள். கழகங்களின் ஆட்சிக்கு ஏற்றார் போல் இரண்டு கழகங்களுக்கும் தனித்தனி ஆதரவு ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் லாபி உண்டு.

ஆட்சி மாறும்போது காட்சியும் மாறும். அவரவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுவார்கள். எதிர்கட்சி ஆதரவு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் டம்மி பதவிகளில் அமர்த்தப்பட்டு தூக்கி அடிக்கப்படுவார்கள். 

இதற்காக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆட்சி மாறியதும் கட்சி மாறும் நிலையை தமிழக அரசியல் கண்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது நேர்மையான அதிகாரிகள் தான். நேர்மையாக தங்கள் பணியை அரசியல் சார்பற்று செய்யும் அதிகாரிகள் சாதாரண டம்மி பதவிக்கு அமர்த்தப்படுவார்கள், நியாமாக வரவேண்டிய பதவி வராது. சீனியாரிட்டி இருந்தாலும் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மேலதிகாரிகளாக உயர்த்தப்படும் போது அவர்களுக்கு கீழ் பணியாற்றும் துரதிர்ஸ்டம் இவர்களுக்கு கிடைக்கும். 

இன்னும் பல அதிகாரிகள் ஓய்வுக்கு பிறகும் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்டு அவர்கள் அதிகாரம் செய்வார்கள் . பழைய உதாரணம் திமுக ஆட்சியில் உண்டு. சமீபத்திய உதாரணம் காவல்துறையில் ராமானுஜம், ஆட்சி நிர்வாகத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்னும் தொடர்கிறார்.

அவ்வாறு பலமுறை ஆளானவர்தான் கிரிஜா வைத்தியநாதன். 1981 ஆம் ஆண்டு அதிகாரியான கிரிஜா வைத்திய நாதன் ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வுக்கு பிறகு தலைமை செயலாளராக வரவேண்டியவர்.ஆனால் மின்சார வாரிய சேர்மனாக இருந்த 1985 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான ஞானதேசிகன் குறுக்கு வழியில் கொண்டு வரப்பட்டார். 

பல சீனியர் ஐஏஎஸ்கள் இருந்தும் அரசாங்கத்துக்கு தேவை என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் ஞானதேசிகன் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் ராமமோகன் ராவ் நியமிக்கப்பட்டார். இவரும் 1985 ஆம் ஆண்டு பேட்ச்  ஐஏஎஸ் ஆவார். 

இவருக்கு கீழ் பல சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் நிர்பந்தம் ஏற்பட்டது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள கிரிஜாவைத்திய நாதன் , சண்முகம், சந்திர மவுலி உட்பட 13 அதிகாரிகளை தாண்டி இவரை நியமித்ததாக அப்போதே பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். 

 தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை பலரும் வரவேற்றுள்ளனர். தற்போதுதான் சரியான தேர்வு நிகழ்ந்துள்ளது என மூத்த ஐஏஎஸ் ஓய்வு தேவசகாயம் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக  திருமதி கிரிஜா  வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளளார் 

கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள கிரிஜா வைத்தியநாதன் நில நிர்வாகத்துறை ஆணையராக பதவி வகித்து வந்தார்.

1959 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த கிரிஜா வைத்தியநாதன், சென்னை ஐஐடியில் படித்து, பட்டம் பெற்றவர் நல வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.கடந்த 1981ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. 

மதுரை மாவட்ட ஆட்சியராக  பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறை, கல்வித் துறைகளில் உயர் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். கிரிஜா வைத்தியநாதன் சுகாதாரத் துறையில் மட்டும் 15 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை வெங்கிட்டரமணன், கடந்த 1990 முதல் 1992 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார்.

முனைவர் பட்டம் பெற்றுள்ள கிரிஜாவைத்தியநாதன் சுகாதாரதுறையில் வல்லுனர் ஆவார்,. நேர்மையும் , திறமையும் கட்சி சாராதா அமைதியான அதிகாரி என பெயரெடுத்தவர் ஆவார்.

click me!