
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கல்லூரி மாணவி ஒருவரை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த கொடூரம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தக்கலையைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 13 ஆம் தேதி வெளியே சென்ற கல்லூரி மாணவி, விடுதிக்கு திரும்ப வரவில்லை. மாணவி காணாமல் போனது குறித்து அவரரின் தந்தை, தக்கலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதனை அடுத்து போலீசார், காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். நாகர்கோவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காணாமல் போன கல்லூரி மாணவி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த விடுதியில் சோதனை நடத்திய போலீசார், கல்லூரி மாணவி அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அந்த பெண்ணிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
அப்போது, வேன் ஓட்டுநர் பிரஜித் என்பவருக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, விடுதியில் அடைத்து வைத்து பாலியல் கொடுமை நடத்தப்பட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
தன்னிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பிரஜித் மட்டுமல்லாது அவரின் நண்பர்கள் கோபால், திணேஷ், ஞானபிரவின் ஆகியோரும் தன்னிடம் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உட்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கல்லூரி மாணவி அளித்த தகவலை வைத்து, குற்றவாளிகளில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நண்பர்களுடன் பெண்ணை சீரழித்த கொடூரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.