மனமகிழ் மன்றங்கள் பெயரில் சூதாட்ட கிளப்கள்;  பணத்தை இழக்கும் கூலித் தொழிலாளிகள்; நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?

First Published May 29, 2018, 8:58 AM IST
Highlights
Gambling clubs in theni Wage workers affected Will Collector take action?


தேனி 

தேனியில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட கிளப்கள் செயல்படுவதாகவும் இதில் கூலி தொழிலாளர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

இந்தக் கூட்டத்தில் அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்ட உதவிகள் கேட்டும், குடும்ப பிரச்சினை, தனிநபர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டன. 

இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ் தலைமையில் அக்கட்சியினர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். 

அந்த மனுவில், "தேனி மாவட்டம் முழுவதும் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்ட கிளப்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நடக்கும் சூதாட்டத்தில் கூலி வேலை செய்பவர்கள் அதிகளவில் பங்கேற்று பணத்தை இழந்து வருகின்றனர். அவர்களின் குடும்பங்கள் வறுமையில் சிக்கி உள்ளது. 

அரசு அனுமதி பெற்றுதான் இதுபோன்ற மனமகிழ் மன்றங்கள் செயல்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறபப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இக்கூட்டத்தின் போது, கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் 17 பயனாளிகளுக்கு மண்பாண்ட மின்விசை சக்கர எந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், ஊன்றுகோல், உருப்பெருக்கி போன்ற உபகரணங்களையும் ஆட்சியர் வழங்கினார். 

மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ. 4 இலட்சத்து 33 ஆயிரத்து 850 மதிப்பில் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

click me!