மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகரில் கடல் சீற்றம் – கரையோர மீனவ மக்கள் கடும் பீதி

First Published Dec 1, 2016, 10:03 AM IST
Highlights


சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், கோவளம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகளவில் உள்ளது. இதனால், கரையோரம் வாழும் மீனவ மக்கள், பாதுகாப்பான இடங்களை தேடி நகர தொடங்கி விட்டனர்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், வழக்கத்தை விட அதிகமாகவே மழை பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய வட மாவட்டங்களிலும், தூத்துக்குடி உள்ளிட்ட சில தென் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னைக்கு தென்கிழக்கே வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தென்கிழக்கே 1,070 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நேற்று காலை புயலாக மாறியது.

புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதால், கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

புயல், மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாகளில் உள்ள பள்ளிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இரு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், கோவளம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகளவில் உள்ளது. இதனால், கரையோரம் வாழும் மீனவ மக்கள், கடும் பீதியடைந்துள்ளனர். இதனால், அவர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி நகர தொடங்கி விட்டனர்.

click me!