சென்னை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்து கொண்டுள்ளது.
தடம் புரண்ட சரக்கு ரயில்
தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரும் முக்கிய வழி செங்கல்பட்டு வழியாகும், இந்த ரயில் நிலையம் வழியாகத்தான் ரயில்கள் சென்னைக்கு வர இயலும். இந்த நிலையில் செங்கல்பட்டு ரயில்வே கேட் அருகே சரக்கு ரயில் தடம்புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக சென்னை ஹார்பர் நோக்கி சென்ற சரக்கு ரயில் இரயில் நள்ளிரவு நேரத்தில் செங்கல்பட்டு ரயில்வே கேட் பகுதியில் சென்ற போது அதிக பாரம் தாங்காமல் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக தடம்புரண்டுள்ளது
ரயில் சேவை பாதிப்பு
இதனையடுத்து பயங்கர சத்தத்துடன் 10க்கும் மேற்ப்பட்ட இரயில்பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியே சென்று தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படாத நிலையில் ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணியை தீவிரம் காட்டி வருகின்றனர். நள்ளிரவு நேரம் என்பதால் பெரிய அளவில் போக்குவரத்து சேவை இல்லை. அதே நேரத்தில் அதிகாலை நேரத்தில் தென் மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை தாண்டி செல்ல வேண்டி இருப்பதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ராமேஸ்வரம், நெல்லை, கன்னியாகுமரி,தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இதையெல்லாம் பண்ணிடாதீங்க.. மீறினால் 1000 ரூபாய் அபராதம்..!