ஓரினச் சேர்க்கையின்போது ஃபிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணி சாவு; உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த தஞ்சை இளைஞர் கைது...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 13, 2018, 8:52 AM IST
Highlights

ஃபிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும்போது வலிப்பு ஏற்பட்டு இறந்ததால் அவரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரை காவலாளர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் இந்த திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் அருகேவுள்ளது ஓலையக்குன்னம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகரி. இவர் தனது வயலுக்குச் சென்றிருந்தபோது அங்கு பை ஒன்று கிடந்தது. அதில், ஃபிரான்ஸ் நாட்டு சுற்றுலாப்பயணி ஃபியாரே பூட்டியார் பெர்ணாண்டோரைனே (69) என்பவரின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), டைரி போன்றவை இருந்தது. 

பாஸ்போர்டை பார்த்ததும் இதுகுறித்து மதுக்கூர் காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் கொடுத்தார் அழகிரி. அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் மற்றும் காவலாளர்கள் பாஸ்போர்ட் கிடந்த இடத்தைப் பார்வையிட வந்தனர். பின்னர், பையை சோதனையிட்டனர். அதில், மதுக்கூர் அடுத்துள்ள ஆவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் (29) என்பவரின் முகவரி எழுதப்பட்ட துண்டுச்சீட்டு ஒன்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து திருமுருகனிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, ஃபிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியை ஃபியாரேவை தெரியாது என்று முரண்பாடாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த காவலாளர்கள் அவரை போலீஸ் பாணியில் விசாரித்தனர். 

அப்போது திருமுருகன், "2009-2011 வரை சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்தேன். அப்போது ஒருநாள் மாமல்லபுரத்திற்குச் சுற்றுலா சென்றபோது ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபியாரே பூட்டியார் பெர்ணாண்டோரைனே என்பவரும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்கள் ஆனோம். 

ஃபியாரே எப்போது தமிழகம் வந்தாலும் என்னைத் தொடர்பு கொண்டு பேசுவார். இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளோம். நாங்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டோம். இந்த நிலையில் போன மாதம் 31-ஆம் தேதி ஃபியாரே சென்னை வந்தார். 3-ஆம் தேதி வரை சென்னையில் தங்கியிருந்த அவர் பின்னர் திருச்சிக்கு வந்தார். இங்கு தங்கி பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு 5-ஆம் தேதி என்னைத் தொடர்பு கொண்டார்.

இதனையடுத்து திருச்சிக்குச் சென்று அவரை அழைத்துக்கொண்டு மதுக்கூரில் உள்ள எனது வீட்டுக்கு வந்தேன். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டோம். அப்போது, அவருக்கு திடிரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மூச்சு இருக்கிறதா? என்று பார்த்தபோது அவர் இறந்ததை தெரிந்துக் கொண்டேன். 

அவரது உடலை என்ன செய்வதென்று தெரியாததால் வீட்டுச் சமையலறையில் வைத்து எரிக்க முடிவு செய்தேன். அதன்படி, டீசல், பெட்ரோல் மற்றும் டயர் ஆகியவற்றை வைத்து ஃபியாரே உடலை எரித்தேன். பின்னர், எரியாமல் கிடந்த சதைப்பகுதி, எலும்பு மற்றும் சாம்பலை மூன்று சாக்குப் பைகளில் கட்டி மதுக்கூரில் உள்ள உக்கடை வாய்க்காலில் போட்டுவிட்டேன். ஃபியாரே கொண்டுவந்த பையை ஓலையக்குன்னம் கிராமத்தில் வீசிவிட்டேன்" என்று திருமுருகன் வாக்குமூலம் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை தாசில்தார் சாந்தக்குமார் மற்றும் காவலாளர்கள் சாக்குப் பையில் எரிந்த நிலையில் இருந்த ஃபியாரேவின் உடலின் சதைப் பகுதிகள், எலும்பு மற்றும் சாம்பலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்தனர். 

பின்னர், திருமுருகன் மீது கொலை செய்த குற்றத்திற்காகவும், தடயங்களை அழித்த குற்றத்திற்காகவும் வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

click me!