
விருதுநகர்
விருதுநகரில், கைத்தறி நெசவில் பயன்படுத்த வேண்டிய நூல்களை வாங்கி விசைத்தறிக் கூடத்தில் நெசவு செய்த நால்வர் சோதனையின்போது வசமாக சிக்கினர். அவர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.
கைத்தறி நெசவில் பயன்படுத்த வேண்டிய நூல்களை விசைத்தறிக் கூடத்தில் நெசவு செய்கின்றனர் என்ற தகவல் மதுரை கைத்தறி துறை எம்போஸ்மென்ட் அலுவலகத்திற்கு கிடைத்தது.
அதன்படி, மதுரை கைத்தறி துறை எம்போஸ்மென்ட் அலுவலர் சங்கரவேல்பாண்டியன் மற்றும் உதவி அலுவலர்கள் விருதுநகர் மாவட்டம், செட்டியார்பட்டி பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின்போது, செட்டியார் பட்டி பாம்பலம்பன் கோவில் தெருவில் விசைத்தறிக் கூடங்கள் நடத்தி வரும் தில்லையப்பன், முருகேசன், அறிவுதுரை மற்றும் தளவாய்புரம் பகுதியில் தங்கப்பன் ஆகியோர் கைத்தறிக் கூடங்களில் நெசவு செய்ய நூல்களை வாங்கி விசைத்தறி கூடங்களில் நெசவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் நால்வர் மீதும் தளவாய்புரம் காவல்நிலையத்தில் மதுரை கைத்தறி துறை எம்போஸ்மென்ட் அலுவலர் சங்கரவேல்பாண்டியன் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் அவர்கள் நால்வரையும் கைது செய்து நூல் சேலைகளை எடுத்துச் சென்றனர்.