
விழுப்புரம்
விழுப்புரத்தில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 17 ஆயிரம் சாராய புட்டிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நொருக்கி அழிக்கப்பட்டன.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படும் சாராய புட்டிகளை சோதனைச் சாவடிகளில் மதுவிலக்கு காவலாளர்கள் பறிமுதல் செய்வதும், பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதும் வழக்கமான ஒன்றே.
இந்த நிலையில், கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்திற்கு உள்பட்ட மரக்காணம், வானூர், கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட சாராய புட்டிகளை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று சுமார் 17 ஆயிரம் சாராய புட்டிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் அரிகரன், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மரக்காணத்தை அடுத்த தீர்த்தவாரி கடல் பகுதி அருகிலுள்ள சாலையில் கொட்டினர். பின்னர், அவையனைத்தும் பொக்லைன் இயந்திரம் மூலம் நொறுக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட சாராய புட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 15 இலட்சம். பின்னர், அழிக்கப்பட்ட புட்டிகளை காவலாளர்கள் அதே பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.