ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் சிக்கினார் கார்த்தி சிதம்பரம் - சம்மன் அனுப்பியது சிபிஐ...

First Published Sep 13, 2017, 6:04 PM IST
Highlights
Former Union Minister of Foreign Affairs in the Aircel Maxis case The CBI sent a letter to Chidambarams son Karthi Chidambaram. It is said to be present tomorrow morning to explain.


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்காக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.

 ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரத்தின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு சி.பி.ஐ. தரப்பில் வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ கடந்த மே மாதம் 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு கடந்த ஜூன் மாதம் சிபிஐ சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

பின்னர், அவரைக் கண்காணிக்கப்படும் நபராக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய கார்த்தி சிதம்பரம், மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு இடைக் கால தடை பெற்றார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஆக.23-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவிட்டது.

அதன்படி, டெல்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது, சுமார் 100 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து 28-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில், தற்போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!