கார் விபத்தில் அதிமுக மாஜி எம்எல்ஏ மரணம்.. மற்றொரு மாஜி எம்எல்ஏ பலத்த காயம் - வெளியான அதிர்ச்சி தகவல்

By Ajmal Khan  |  First Published Feb 26, 2024, 12:43 PM IST

மீஞ்சூர் பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான நிர்மலா பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


கார் மீது லாரி மோதி விபத்து- மாஜி எம்எல்ஏ மரணம்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த  மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் உள்ள சீமாவரம் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் தனது மனைவியோடு காரில் சென்றுள்ளார், அப்போது கார் மீது வேகமாக வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலையே மாஜி எம்எல்ஏ ரவிக்குமார் உயிரிழந்தார். விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமாரின் மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான நிர்மலா படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

Latest Videos

undefined

எடப்பாடி இரங்கல்

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. E. ரவிக்குமார் மற்றும் அவருடைய மனைவியும், திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி R. நிர்மலா ஆகியோர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில், திரு. ரவிக்குமார் அவர்கள் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், திருமதி நிர்மலா அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும், ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்; 

எச்சரிக்கையுடன் பயணம் செய்யுங்கள்

கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும்போது, மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்தி வந்தபோதிலும், இதுபோன்ற விரும்பத் தகாத நிகழ்வுகள் நடைபெற்று விலைமதிக்க முடியாத கழக உடன்பிறப்புகள் உயிரிழக்கும் சம்பவம் மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது. இனிவரும் காலங்களில், கழக உடன்பிறப்புகள் தங்கள் பயணங்களை மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் மேற்கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன்.  கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் தொடர்ந்து விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. ரவிக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், 

விரைவில் உடல் நலம் பெற வேண்டும்

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அன்புச் சகோதரி திருமதி நிர்மலா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

click me!