மீனவரை கைது செய்த வனத்துறையினர்; படகும் பறிமுதல் - ஆத்திரத்தில் வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை...

 
Published : May 12, 2018, 10:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
மீனவரை கைது செய்த வனத்துறையினர்; படகும் பறிமுதல் - ஆத்திரத்தில் வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை...

சுருக்கம்

Forest officials arrested fisherman Boat confiscation - village people siege forest department office

கடலூர்
 
மீன் பிடிக்க சென்ற மீனவரை வனத்துறையினர் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர், இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், கிள்ளை அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா மையத்தில் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை காடுகளும், 3,300 கிளை வாய்க்கால்களும் உள்ளன. 

இதனைக் கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். அப்போது சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்துறை படகுகள் மூலம் சவாரி செய்து இயற்கை அழகை ரசித்து செல்வர். 

இந்த நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஒரு சில மீனவர்கள் தங்களது படகுகள் மூலம் சுற்றுலா மையத்துக்கு அழைத்து செல்வதாக புகார் எழுந்தது.

அதனடிப்படையில் சிதம்பரம் வன சரகர் சாகுல் அமீது தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை பிச்சாவரம் சுற்றுலா மைய வனப்பகுதியில் படகு மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது மீனவர் ஒருவர் படகு மூலம் சின்னவாய்க்கால் கடற்கரையில் இருந்து வெற்றாற்றில் வந்து கொண்டிருந்தார். இதைபார்த்த வனத்துறையினர் அந்த படகை வழிமறித்து, அதில் வந்த மீனவரிடம் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், அவர் கிள்ளை மீனவர் தெருவை சேர்ந்த அன்புச்செழியன் (38) என்பது தெரிந்தது. மேலும் அவர், வனத்துறையினரிடம் மீன்பிடிக்க வந்ததாக கூறினார். 

இதனை நம்பாத வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை சின்னவாய்க்கால் கடற்கரையில் இறக்கிவிட்டு வந்ததாக கூறி, அவருடைய படகை பறிமுதல் செய்ததோடு, அன்புச்செழியனையும் கைது செய்து கிள்ளை வனத்துறை அலுவகத்துக்கு அழைத்து வந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த அவருடைய மனைவி காந்திமதி (34) தனது கணவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மாலை கிள்ளை வனத்துறை அலுவலகத்துக்கு சென்றார். ஆனால், வனத்துறையினர் அவருடைய கணவரை பார்க்க அனுமதிக்கவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த காந்திமதி இதுபற்றி தனது உறவினர்களிடம், கிராம மக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து நேற்றுகாலை 9 மணியளவில் காந்திமதியின் உறவினர்கள், கிள்ளை, முழுக்குத்துறை கிராம மக்கள் கிள்ளை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் கிள்ளை வனத்துறை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். 

பின்னர், "கைது செய்யப்பட்ட மீனவர் அன்புச்செழியனை உடனே விடுவிக்க வேண்டும்" என்று கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த வன சரகர் சாகுல் அமீது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சட்டப்படிதான் அன்புச்செழியன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க முடியாது என்றும் கூறி, அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்.

இதில், மேலும் ஆத்திரமடைந்த மீனவ கிராம மக்கள் மீனவரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வன சரக அதிகாரியை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வனத்துறை அதிகாரி ராஜேந்திரன், வன சரக அலுவலர் சாகுல்அமீதை தொடர்பு கொண்டு அன்புச்செழியனுக்கு ரூ.2000 அபராதம் விதித்து, அவரை உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிட்டார். 

பின்னர், அபராத தொகை கட்டப்பட்டதை அடுத்து அன்புச்செழியன் விடுவிக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட படகும் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி