
கோயம்புத்தூர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவற்றின் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோயம்புத்தூரில் நடந்த சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில மாநாடு நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர் திருமண மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வடகோயம்புத்தூர் சிந்தாமணி முன்புறம் இருந்து நேற்று மாலை தொடங்கிய ஊர்வலத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
வடகோயம்புத்தூரில் தொடங்கிய ஊர்வலம் பூமார்க்கெட், தியாகி குமரன் வீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று ராஜவீதி தேர்நிலைத்திடலில் முடிவடைந்தது.
அங்கு இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.
இந்தக் கூட்டத்தில் ஆட்டோ சம்மேளன தலைவர் எம். சந்திரன், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி, பொருளாளர் ஏ.பழனி, துணை பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாரன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் பொதுக்கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்.
பொதுபோக்குவரத்தை சீர்குலைத்து பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செய்வதற்கு ஏதுவாக மோட்டார் வாகன சட்ட திருத்தம் மேற்கொள்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
ஆட்டோ தொழிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.