
நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத் தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் தராததால் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, சம்பளத்தை தர வேண்டும் என்று தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு முறையிட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 16 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 1000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
மாம்பாடி ஊராட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 300–க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று மாம்பாடி ஊராட்சி பகுதியில் உள்ள நூறுநாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் தாராபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், இதுகுறித்து முற்றுகையிட்ட தொழிலாளர்கள் கூறியது:
“ஊரக வேலைவாய்ப்பு நூறு நாள் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்குவதில்லை. மாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட குருநாதன்கோட்டை, அக்கரைபாளையம், புளியம்பட்டி, குமாரசாமி கோட்டை, மாம்பாடி ஆகிய கிராமங்களில் 300–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் வேலை செய்து வருகின்றன.
இந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் நிறைய பேர் வேலை செய்கின்றன. இந்த ஊதியத்தை நம்பித்தான் பிழைப்பு நடத்துகின்றனர். ஆறு மாதங்களாக ஊதியம் வழங்காததால், சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை ஊதியம் கேட்டு மனு அளித்தும், இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் “உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்” என்று தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டோம்” என்றுக் கூறினர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில், “விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சமாதானம் அடைந்தனர்.