ஒருநாள்தான் லாரி ஓடல அதுக்கே 40 ஆயிரம் பேர் வேலை காலி; ரூ.100 கோடி வர்த்தம் பாதிப்பு…

First Published Mar 31, 2017, 7:25 AM IST
Highlights
40 thousand people evacuated atukke otala work one day Larry Rs 100 crore damages trading


 

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தின் முதல் நாளில், லாரி ஒட்டுநர்கள், கிளீனர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என 40 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும், ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது திருப்பூரில் மட்டும். அப்போ தமிழகம் முழுவதும் எவ்வளவு இருக்கும்?

தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், “லாரிகளுக்கு காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண அதிகரிப்பு போன்ற உத்தரவுகளைத் திரும்ப பெற வேண்டும்.

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பைத் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

திருப்பூர் கூட்ஷெட் பகுதியில் இரயிலில் இருந்து வரும் சரக்குகள் எதுவும் இறக்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான லாரிகள் அந்த பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

அனுப்பர்பாளையம் பகுதியில் தயாராகும் பாத்திரங்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பது முற்றிலும் முடங்கிப் போனது. மேலும் காங்கேயம் பகுதியில் இருந்து சமையல் எண்ணெய், அரிசி போன்றவை வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

உடுமலை பகுதியில் இருந்து தேங்காய் கொப்பரை, பல்லடம் பகுதியில் இருந்து கறிக்கோழிகள் உள்ளிட்டவை வெளியூர்களுக்கு அனுப்பிவைக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இதன்காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருப்பூரில் இருந்து பனியன் துணிகள், ஜவுளி ஆடைகள், நூல், பனியன் கழிவுகள் போன்றவை லாரிகள் மூலமாக கேரளா, மராட்டியம், டெல்லி, ஆந்திரா, கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் பல்லடம் பகுதியில் இருந்து காடா துணி, நூல் பண்டல்கள் போன்றவை வெளியூர்களுக்கு அனுப்பிவைப்பதும் முடங்கியது.

இதனால் பனியன் நிறுவன உரிமையாளர்கள் நேற்று ஆடைகளை வெளியூர்களுக்கு அனுப்பிவைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.

பனியன் ஆடைகளை வெளிநாடுகளுக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைப்பதற்காக தூத்துக்குடி, கொச்சி, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம்.

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால், துறைமுகங்களுக்கு பனியன் சரக்குகளை அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பனியன் நிறுவன உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.

இதுபற்றி திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியது:

“திருப்பூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளோம். இதனால் 8 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக கடந்த 27–ஆம் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்புவதற்கான முன்பதிவை நாங்கள் நிறுத்தி விட்டோம்.

லாரி ஒட்டுநர்கள், கிளீனர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் என 40 ஆயிரம் பேர் இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். லாரிகள் ஓடாததால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது” என்று அவர் கூறினார்.

click me!