
தர்மபுரி
தர்மபுரியில் தங்க காசுகளை பாதி விலைக்கு விற்கிறோம் என்று கூறி போலி காசுகளை கொடுத்து மோசடி செய்ய முற்பட்ட பெண்கள் உள்பட ஐந்து பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (58). இவரும் இவருடைய உறவினர்கள் சிலரும், தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள சில கிராமங்களுக்குச் சென்று தங்களிடம் தங்க காசுகள் இருப்பதாகவும், அவற்றை பாதி விலையில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
மக்களை நம்ப வைக்க, கிராமப்பகுதிகளை சேர்ந்த சிலருக்கு அரை பவுன் தங்க காசுகளை கொடுத்து நகைக் கடைகளில் உண்மையான தங்கம் தானா? என சோதித்து உறுதிபடுத்தி கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி கூடுதலாக தங்க காசுகளை தருமாறு கூறிய சிலருக்கு அந்த கும்பல் போலியான தங்க காசுகளை கொடுத்துள்ளது.
இவர்களுடைய நடவடிக்கையில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி கிருஷ்ணாபுரம் காவலாளர்களுக்குத் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிருஷ்ணாபுரம் காவலாளர்கள், சக்திவேல் மற்றும் அவருடைய உறவினர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த சில தங்க காசுகளை பரிசோதித்தபோது அவை போலியானவை என தெரிந்தது.
மேலும், இது தொடர்பாக “மோசடி வழக்கு” பதிவு செய்து காவலாளர்கள், சக்திவேல் மற்றும் அவருடைய உறவினர்கள் ரவி (40) அவருடைய மனைவி விஜயா (35), ஐய்யப்பன் (28) அவருடைய மனைவி அலமேலு (23) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.