ரேஷனில் தடுப்பூசி கட்டாயம் .. விரைவில் அறிவிப்பு வருமா..? - அமைச்சர் பதில்

By Thanalakshmi VFirst Published Dec 6, 2021, 8:03 PM IST
Highlights

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு தடுப்பூசி கட்டாயமாக்கபட்டுள்ளதாகவும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்றும் தகவல்கள் வெளியான நிலையில், இதுக்குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
 

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "கொரோனா தடுப்பூசி அனைவரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டும் தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்ற பரவும் தகவல் உண்மை அல்ல. அது வதந்தி. இது தொடர்பாகத் தமிழக அரசு எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை" என்று கூறினார்.  

மேலும் திருவாரூரில் மட்டும் 39 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் அளவுக்கு நிலையங்கள் உள்ளன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அரவைக்கு எடுக்க அரிசி ஆலை உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், டெல்டா பகுதிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை நெல்லின் ஆதார விலையை 1,960 ரூபாயில் இருந்து 2,060 ரூபாயாகவும், பொது ரகம் ஆதார விலை 1,940 ரூபாயில் இருந்து 2,015 ரூபாயாகவும் உயர்த்தபட்டுள்ளது. தமிழகத்தில் 5 இடங்களில் ஒரு ஆலைக்கு 500 மெட்ரிக் டன் நெல் அரவை செய்யும் வகையில் திருவாரூர்,தஞ்சாவூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய அரிசி ஆலைகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறை என்பது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்திட்டம் 97% செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் கார்டு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தபடி இதுவரை தமிழ்நாடு முழுவதும் 7 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு புதியதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தைப்பொங்கலுக்கு 21 வகையான மளிகைப் பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. வேறு மாநில மக்கள் ரேஷன் பொருட்களில் தங்களுக்கான பொருட்கள் கிடைக்கவில்லை எனப் புகார் அளித்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதித்த ஆபத்தான நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 6 பேரின் மாதிரிகளில் நடத்திய பரிசோதனையில் அவர்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஒருவருக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளதாக  கூறபடுகிறது.

click me!