
திருநெல்வேலி
விடாமல் பெய்து வரும் கன மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் இங்குச் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பேரருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுவிட்டது.
இதனையடுத்து, மூன்று அருவிகளிலும் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு காவலாளர்கள் தடை விதித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. அதனை அடுத்து, அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், மாலையில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் மீண்டும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி பகல் முழுவதும் பெய்த தொடர் கன மழையால் பேரருவியில் மாலையில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நேரடியாக தடாகத்திற்குள் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.