வாடகைக்கு கார் எடுப்பதைபோல எடுத்து ஓட்டுநரை கத்தியால் குத்திய நால்வருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 15, 2018, 7:37 AM IST
Highlights

வாடகைக்கு கார் எடுப்பதைபோல எடுத்து ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்தி சென்ற நால்வர் கைது செய்யப்பட்டனர். 

வாடகைக்கு கார் எடுப்பதைபோல எடுத்து ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்தி சென்ற நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ஐந்து ஆண்டுகள் கடும் காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், விரும்மாண்டம் பாளையம், நஞ்சேகௌண்டன்புதூர், விவேகானந்தா வீதியைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஏ.கே.டிராவல்ஸ் உரிமையாளர் ஆனந்தகுமார் என்பவருக்குச் சொந்தமான காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்தார். 

இந்த நிலையில் கடந்த 2013, மார்ச் 8-ஆம் தேதி இரவு ஆனந்தகுமாரின் செல்போனுக்கு வந்த அழைப்பில் பழனி வரை செல்வதற்கு வாடகைக்கு கார் வேண்டும் என்றும், அந்த காரை கோயம்புத்தூரில் உள்ள புண்ணியக்கோடி தெருவில் உள்ள சரவணா வணிக வளாகத்துக்கு கொண்டுவருமாறும் கூறியுள்ளார்.

ஆனந்தகுமார், ஓட்டுநர் அருள்பிரகாஷை வாடிக்கையாளரை பிக்-அப் செய்ய அனுப்பினார். அருள்பிரகாஷும் சொன்ன இடத்திற்கு சென்றுவிட்டார். அங்கு இரண்டு பேர் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காரில் ஏறி அமர்ந்து கொண்டனர். பின்னர், கார், பொள்ளாச்சி உடுமலை வழியாக பழனி முருகன் கோயிலுக்குச் சென்றது. அங்கு இரண்டு பேர் காரில் ஏறினர். நால்வரையும் ஏற்றிக் கொண்டு கார் புறப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், பல்லடம், புள்ளியப்பம்பாளையம் அருகே மார்ச் 8-ஆம் தேதி காலை 5 மணிக்கு கார் வந்துக் கொண்டிருந்தது. அப்போது நால்வரும் கத்தியால் ஓட்டுநர் அருள்பிரகாஷை குத்தினர். அவரை கீழே தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றுவிட்டனர். பின்னர், இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் அருள்பிரகாஷ் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் நால்வரையும் தேடி வந்தனர் காவலாளர்கள். காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் உதவியோடு காரையும், கத்தியால் குத்தியவர்களையும் கண்டுபிடித்தனர். அவர்கள், தருமபுரி மாவட்டம், திண்டலூரைச் சேர்ந்த சேகரன், கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம், நியூ காலனியைச் சேர்ந்த தாமஸ் அருண்பிரசாத், சேலம் மாவட்டம், கெங்கவல்லி, வீரகனூரைச் சேர்ந்த பிரபு மற்றும் இவரது தம்பி அருண் என தெரிந்தது.

நால்வரையும் பல்லடம் காவலாளர்கள் கைது செய்து திருப்பூர் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்குத் தொடர்ந்தனர், இந்த வழக்கு பல்லடத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பொன்னுசாமி ஆஜராகி வாதாடினார். 

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா தீர்ப்பு கூறினார். அந்தத் தீர்ப்பில், "சந்திரசேகரன், தாமஸ் அருண்பிரசாத் ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் கடும் காவல் சிறைத் தண்டையும், தலா ரூ.5000 அபராதமும் விதித்தார். பிரபு மற்றும் அருண் ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் கடும் காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.2000 அபாரதம் விதித்தார்.

click me!