மீண்டும் வெள்ள அபாயம் - முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை; விநாடிக்கு 8000 கன அடி தண்ணீர் திறப்பு; ...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 15, 2018, 6:57 AM IST
Highlights

திருப்பூரில் உள்ள அமாரவதி அணை தன்னுடைய முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 8000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

திருப்பூரில் உள்ள அமாரவதி அணை தன்னுடைய முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 8000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அமராவதிநகரில், இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது அமராவதி அணை. உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. 

இந்த அணைக்கு ஆறுகள், ஓடைகள் போன்றவற்றின் மூலம் மழைக்காலங்களில் நீர்வரத்து வரும். அப்படி வரும் நீர்வரத்தால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். சுற்றியுள்ள கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கவும் இந்த அணையை நம்பியே பல்வேறு திட்டங்களும் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருவதால் அமராவதி அணையின் நீர் ஆதாரங்களான பாம்பாறு, தேனாறு மற்றும் சின்னாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

அதன்படி போன மாதம் 15-ஆம் தேதி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர், 16 முதல் 19 வரை அமராவதி அணையில் இருந்து ஒன்பது கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது.

அதேபோன்று, கடந்த 9-ஆம் தேதியும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து இரண்டாவது முறையாக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டதால் அதனை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் இரவு முதல் ஒன்பது கண் மதகுகள் வழியாக மீண்டும் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி அணையின் மொத்த நீர்மட்டமான 88 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. 

அமராவதி அணைக்கு விநாடிக்கு 8000 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 8000 கன அடியும், பிரதான கால்வாயில்  இருந்து 440 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!