
புதுக்கோட்டை
இலங்கை அரசின் புதிய சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளுகு பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மூன்றாவது தொடர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நாள்தோறும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய மீனவர்களுக்கு எதிரான புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, "எல்லைத்தாண்டி இலங்கை பகுதிகளில் மீன்பிடித்து சிறைபிடிக்கப்பட்டால் ரூ.50 இலட்சம் முதல் ரூ.7 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்" என்று அறிவிப்பு வெளியிட்டது
"இந்த அறிவிப்பு இந்திய மீனவர்களுக்கு முற்றிலும் எதிரான சட்டம். இதனால் இந்த சட்டத்தை இலங்கை அரசு திரும்ப பெற மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் மத்திய அரசு இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மற்றும் அவர்களது விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடந்த 29-ஆம் தேதி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தால் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி வைத்துவிட்டுள்ளனர். இதனால், மீன்பிடி தளங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.